எல்லைமீறிய ஆபாச காட்சிகளுடன் கூடிய படங்களை வெளியிட்டு வந்த 18 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓடிடி தளங்களின் வளர்ச்சி என்பது குறுகிய காலகட்டத்தில் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாகக் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு ஆறுதல் அளித்தது இந்த ஓடிடி தளங்கள் தான். பின்னர் படிப்படியாக ஓடிடி தளங்களில் திரைப்படங்களும் நேரடியாக வெளியிடப்பட்டன. இப்படி ஓடிடியின் வளர்ச்சி ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும் மறுபுறம் ஆபத்து நிறைந்ததாகவும் இருந்தது.
ஓடிடி தளங்களுக்குச் சென்சார் இல்லாத காரணத்தால் அதில் எல்லைமீறிய ஆபாச காட்சிகளை வைத்துப் படங்களை எடுத்து வந்தனர். சிலரோ அதற்கு ஒருபடி மேலே சென்று ஆபாச படங்களைப் பதிவேற்றி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தனர். இதனைத் தடுக்க ஓடிடி தளங்களுக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என்று புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் ஓடிடி தளங்களில் ஆபாச படங்கள் அதிகளவில் வெளியாகி வந்தன.
இதனால் அதிரடி ஆக்ஷனில் இறங்கி உள்ள மத்திய அரசு, தற்போது 18 ஓடிடி தளங்களுக்குத் தடை விதித்து உள்ளது. அதுமட்டுமின்றி அந்த 18 ஓடிடி தளங்களுக்குச் சொந்தமான 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சோசியல் மீடியா கணக்குகள் ஆகியவையும் முடக்கப்பட்டு உள்ளன. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் கஷ்யப் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இந்த ஓடிடி தளங்கள் எல்லைமீறிய ஆபாச காட்சிகளுடன் கூடிய படங்களைப் பதிவேற்றி வந்ததால் தற்போது ஆக்ஷன் எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் தடைசெய்யப்பட்ட ஒரு ஓடிடி தளத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து மட்டும் 50 லட்சம் பேர் இந்தச் செயலியை டவுன்லோடு செய்திருக்கிறார்களாம். மேலும் இந்த முடக்கப்பட்ட சமூக வலைதள பக்கங்களில் மொத்தம் 32 லட்சம் பாலோவர்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாம்.

