வங்கதேசத்தில் களமிறங்கிய சீனா – இந்தியாவுக்கு புது சிக்கல்!

Advertisements

டாக்கா:

இந்தியா – வங்கதேசம் இடையேயான மோதல் என்பது நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில் தான் நம்மை எதிரியாகப் பார்க்கும் சீனா புதிய திட்டத்துடன் வங்கதேசத்தில் களமிறங்கி உள்ளது. இந்தத் திட்டம் கைக்கூடும் பட்சத்தில் நம் நாட்டுக்குப் பெரும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

நம் நாட்டுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு என்பது நாளுக்கு நாள் விரிசலடைந்து கொண்டே செல்கிறது. ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தபிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.

இதன் தலைமை ஆலோசகராக உள்ள முகமது யூனுஸ் நம் நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதே இருநாடுகள் இடையே பிரச்சனை ஏற்பட காரணமாக உள்ளது.

இருநாட்டு எல்லையில் நம் நாட்டு வீரர்கள் வேலி அமைப்பதை தடுப்பது, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதலை நடத்துவது, சமூக வலைதளங்களில் நம் நாட்டுக்குச் சொந்தமான பகுதிக்கு உரிமை கொண்டாடி போஸ்ட் செய்வது, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கம் காட்டுவதோடு, ராணுவ உறவை வலுப்படுத்துவது என்று முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறது.

இது நம் நாட்டுக்குப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா – வங்கதேசம் இடையே மோதல் என்பது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே தொடங்கியது. ஆனால் கடந்த 6 மாதமாகச் சீனா இதில் தலையிடவில்லை. சீனா நமக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தான் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான பிரச்சனையைச் சாதகமாக்கி சீனா சைலன்ட்டாக வேலை ஒன்றை செய்துள்ளது.

அதாவது வங்கதேசத்துடன், சீனா தொடர்ந்து நட்பு பாராட்ட விரும்புகிறது. ஆனால் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தவரை அவர் நம் நாட்டுடன் தான் நட்புடன் இருந்தார்.

ஷேக் ஹசீனாவை நம் நாட்டுக்கு எதிராகத் திருப்பி அவருடன் இணக்கமாகச் சீனா பல்வேறு செயல்களைச் செய்தது. ஆனால் எதற்கும் ஷேக் ஹசீனா உடன்படவில்லை.

இந்நிலையில் தான் தற்போது வங்கதேசத்தின் நிலைமை மாறி உள்ளது. ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவரால் இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதோடு முகமது யூனுஸ் இன்னும் சில காலம் மட்டுமே அந்தப் பொறுப்பில் நீடிப்பார். மேலும் இந்த ஆண்டுக்குள் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம். வங்கதேசத்தை பொறுத்தவரை 2 பெரிய கட்சிகள் உள்ளன. ஒன்று ஷேக் ஹசீனாவின் அவாமி லீக். இன்னொன்று முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி எனும் வங்கதேசம் தேசியவாத கட்சி.

இதில் கலிதா ஜியா நம்நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியினர் மீது தற்போது வங்கதேசத்தில் பெரும் அதிருப்தி உள்ளது.

இதனால் பொதுத்தேர்தல் நடத்தால் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று சீனா நினைக்கிறது. இதனால் கலிதா ஜியாவின் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அதன்படி வங்கதேசத்துக்கான சீனா தூதர் யாவ் வென், கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சியின் பொதுச்செயலாளர் மிர்சா பக்ரூல் இஸ்லாம் அலம்கிரை டாக்காவில் சந்தித்து பேசியுள்ளார்.

பொதுத்தேர்தல் நடந்தால் கலிதா ஜியாவின் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதால் இந்தச் சந்திப்பு என்பது நடத்தப்பட்டுள்ளது. கலிதா ஜியாவின் கட்சி எப்போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கும் என்பதால் சீனா அந்தக் கட்சியுடன் தொடர்ந்து நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பிஎன்பி கட்சி பிரமுகர்களும், சீனா தூதர் யாவ் வென்னும் சந்தித்தனர். அதன்பிறகு இப்போது மீண்டும் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது சீனா – வங்கதேசம் இடையேயான உறவை நெருக்கமாக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள்பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது சீனா தூதர் யாவ் வென் மற்றும் பிஎன்பி கட்சியின் பொதுச்செயலாளர் மிர்சா பக்ரூல் இஸ்லாம் அலம்கிர் ஆகியோர் இடையே இருதரப்புக்கும் இடையேயான பொதுவான விஷயங்கள்பற்றிப் பேசியதாக பிஎன்பி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் எந்தெந்த விவகாரங்கள்பற்றிப் பேசினார்கள் என்பது பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

சீனாவின் இந்த நடவடிக்கை தான் நம் நாட்டுக்குப் பெரும் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாட்டுக்கும் அண்டை நாடுகளுடன் நல்ல உறவு என்பது கட்டாயம் வேண்டும். தற்போது வங்கதேசத்துடன் நமக்குப் பிரச்சனை உள்ளது.

இப்படியான சூழலில் இன்னொரு எதிரியாக இருக்கும் சீனா, நம் நாட்டுக்கு எதிர் நிலைப்பாடு கொண்ட கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சியுடன் நெருக்கம் காட்டுவது பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.

அதோடு வங்கதேசத்தில் தேர்தல் நடக்கும்பட்சத்தில் கலிதா ஜியாவின் கட்சிக்குத் தேவையான நிதி உதவியையும் சீனா வழங்கி ஜெயிக்க வைக்க நினைக்கும். இது நடக்கும் பட்சத்தில் நம் நாட்டுக்குக் கூடுதல் தலைவலி என்பது ஏற்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *