IND Vs BAN: வங்கதேசத்தை வாரிச் சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்திய இந்தியா!

Advertisements

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாகக் கைப்பற்றியது.

கான்பூர்:இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது.

மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. அதிரடியாக ஆடிய இந்தியா 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்திருந்தபோது 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இன்று 5வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் தனது 2வது இன்னிங்சில் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணி முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாகக் கைப்பற்றியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *