பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இருந்து வெளியேறியுள்ளது. இதனால், அணி பல்வேறு தரப்பில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், தற்போது சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரராகிய இம்ரான் கான், 1992 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக உலகக்கோப்பை வெற்றிக்கு வழிகாட்டினார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியை நிறுவிய அவர், 2018 இல் பாகிஸ்தான் பிரதமராகப் பதவி வகித்தார். ஆனால், 2023 இல் ஊழல் வழக்கில் கைதானார். கடந்த மாதம், பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது, மேலும் இம்ரானின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் இருந்து வெளியேறியபிறகு, இம்ரான் கான் அவருடைய சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரைச் சந்தித்தார்.
அவர்களது சந்திப்பின் பின்னணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அலீமா, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு இம்ரான் கான் மிகுந்த வருத்தம் அடைந்ததாகத் தெரிவித்தார். சிறையில் அவர்கள் அந்த ஆட்டத்தைப் பார்த்ததாகவும் கூறினார்.
முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கப்படும்போது கிரிக்கெட் அழிந்துபோகும் என இம்ரான் வருத்தம் தெரிவித்ததாக அலீமா கூறினார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியின் செயல்பாடுகள்குறித்து இம்ரான் விமர்சித்துக் கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

