
சுந்தர்.சி இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஷால், “ஒரு நாள் செய்தித்தாளில் ஏதோ ஒரு விஷயம் வரும்… மறுநாள் மறந்து விடுவார்கள்.
ஆனால் விஷாலின் நடுக்கம் உலக அளவில் ரீச் ஆகி விஷால் நல்லா இருக்கணும், விஷால் மீண்டு வர வேண்டும், விஷாலுக்கு உடம்புக்கு என்ன பிரச்சனை, விஷாலை இப்படி பார்த்ததே கிடையாது என மருத்துவர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் இன்னும் பல வெளிநாடுகளிலிருந்து பலரும் தொடர்ந்து அன்பாக விசாரித்தார்கள்.
அன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிந்தபோது எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள், நேசிக்காதவர்கள் கூட என்னை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள், பிடிக்காதவர்களுக்குக் கூட என்னைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.
மருத்துவர்கள் என்னிடம் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம், உங்களுக்கு 103 டிகிரிக்கும் அதிகமான கடுமையான காய்ச்சல் இருக்கிறது என என் உடல்நிலையை காரணம் காட்டி அறிவுரை கூறினார்கள். ஆனால் நான் பிடிவாதம் பிடித்து இந்த நிகழ்ச்சிக்கு கிளம்பியதற்கு காரணம் இயக்குனர் சுந்தர் சி தான்.
இந்த 12 வருடங்களில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் இந்தப் படம்பற்றிப் பேசும்போது எனக்கு அவ்வளவு உற்சாகம் கொடுத்தார். அவருக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.
சண்டக்கோழிக்கு பிறகு நான் ரொம்பவே விரும்பி எதிர்பார்த்த படம் மதகஜராஜா. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூட நிச்சயம் இந்தப் படம் வெளிவரும் என ஊக்கம் கொடுத்தார். 12 வருடம் கழித்து ஒரு படம் வந்து மெகா பிளாக்பஸ்டர் ஆனது இந்தப் படமாகத் தான் இருக்கும்.
காரணம் 4,5 வருடங்களாக வெளிவராமல் இருந்து வெளிவரும் படங்களைக் கூட மக்கள் புறக்கணித்து இருக்கிறார்கள். இறைவன் இதைத் தாமதப்படுத்தினாலும், வேறு படங்கள் நீங்கள் பண்ணிக் கொண்டிருங்கள் உங்களுக்கு ஒரு நல்ல நேரத்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்லித்தான் இந்த 9 நாட்கள் பண்டிகை தொடர் விடுமுறை காலத்தில் இந்தப் படம் வெளியாகும் விதமாகச் செய்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன்.
விஷால் போதைக்கு அடிமையாகி விட்டார்… நரம்புத் தளர்ச்சி என்பது போன்று பலர் தங்கள் கற்பனை உலகத்தில் பல செய்திகளை உருவாக்கி வெளியிட்டார்கள்.
நீங்கள் எப்போதும் என்னைத் தொடர்பு கொண்டு உண்மை என்ன என என்னிடமே கேட்டு அதை வெளியிடலாம். ஆனால் இதிலும் ஒரு நல்ல விஷயம், எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.
மருத்துவமனை, டாக்டரிடம் போவது என்றால் எனக்குப் பயம். ஆனால் சுந்தர்.சி சார் படங்களில் நடிப்பது என்றால் எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சீக்கிரமே குணமாகும். சந்தோஷமாக இருக்கும்.
சுந்தர் சி யின் படங்களில் நடிப்பது என்பது ஒரு மருந்துபோலத் தான். ஒரு இயக்குநர் 30 வருடங்களாகத் திரையுலகில் நீடித்திருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.
இத்தனை வருட அன்பான தோழி வரலட்சுமி, ஏதோ பிரிட்ஜில் வைத்தது போல அப்படியே பிரெஷ் ஆக இருக்கிறார். ஒரே ஒரு படம் தான் பண்ணி இருந்தாலும் கூட ஏதோ கல்லூரியில் படித்து நண்பர்களாக இருப்பது போல நாங்கள் பழகுவோம். நான் பல பிரச்சினைகளை, தடைகளைச் சந்தித்து இருக்கிறேன்.
ஆனால் எப்போதும் அழும் பழக்கம் கிடையாது. கண்ணாடியின் முன் நின்று பேசுவேன். எதையும் தாண்டிச் சென்று விடலாமென எனக்கு நானே பேசித் தைரியம் சொல்லிக் கொள்வேன்.
ஆனால் நான் முதன்முறையாகக் கண்கலங்கியது ஹனுமன் படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சியைப் பார்த்து அதற்குத் தியேட்டரில் ரசிகர்களிடம் கிடைத்த கைதட்டலை பார்த்து நான் கண் கலங்கினேன்.
மீடியாக்களில் மட்டுமல்ல சோசியல் மீடியாக்களிலும் சமீப காலத்தில் ஒரு படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள் என்றால் அது மதகஜராஜா படத்திற்கு தான். பிடிக்காத நபர் கூடச் சத்தம் இல்லாமல் சென்று இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்து ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.
எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளான இன்று எங்கள் எம்ஜிஆரின் (மதகஜராஜா) சக்ஸஸ் மீட் கொண்டாடுகிறோம். இதைவிட வேறென்ன வேண்டும். மார்க் ஆண்டனியில் அவர் பெயரைப் பச்சை குத்தினேன்.
இந்தப் படத்தில் அவர் பெயர் இதில் அவர பெயர் வைத்த டைட்டிலில் நடித்தேன். இரண்டுமே பிளாக் பஸ்டர்கள். எங்கிருந்தோ அவர் என்னை வாழ்த்துகிறார் என்றே நினைக்கிறேன்.
எல்லோரும் ஒரு வெற்றிடம் இருக்கிறது சொல்கிறார்கள் அவர்கள் சொல்வது போலச் சந்தானம் மீண்டும் சில படங்களிலாவது விண்டேஜ் காமெடியனாக வந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.



