
அதிகரித்துவரும் குடும்ப பிரச்சனை! குற்றத்தடுப்பு போலீசார் கவலை…
சென்னை-தமிழகத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீசார் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது, தம்பதியரின் உறவைச் சிதைக்கும் கருவியாக மொபைல் போன் உள்ளது. இதன் பயன்பாடுகுறித்து எழும் சந்தேகங்கள், குடும்ப வாழ்வை சீரழித்து விடுகின்றன.கணவன், மனைவி இடையே போதிய புரிதல் இல்லை. இருவரும் மனம் விட்டுப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னைகளைக் கூடப் பூதாகரமாக்கி, பிரிவை நோக்கி ஓடுகின்றனர்.
பெண்களுக்கு எதிராக, கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தரும் தொல்லைகள்குறித்து, 70 சதவீத புகார்கள் வருவதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறுகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கற்பழிப்பு, மானபங்கப் படுத்துதல், வரதட்சணை கொடுமை, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், குடும்ப வன்முறையென, 10 வகையான தலைப்பின் கீழ் வழக்குகளாகப் பதிவு செய்து வருவதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் 2020 முதல் 2023 ஏப்ரல் வரை, பெண்களுக்கு எதிராகக் கணவர், அவரின் உறவினர்கள் தந்த தொல்லைகள்குறித்து, 2,931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளில் ஆய்வு செய்ததில், தமிழகத்தில் குடும்ப வன்முறை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது என்றும் கடந்த, 2022ல், அதிக பட்சமாக, 1,045 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகின. சட்ட ரீதியாக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும், குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவது ஆரோக்கியமான விஷயம் அல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகள்; அவர்களின் உறவினர்கள் கொடுக்கும், ‘டார்ச்சர்’ குறித்து போலீசார், குடும்ப வன்முறையென, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

