
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கனமழை வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதற்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதலமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள செய்தியில், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கனமழையாலும் மண்சரிவாலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மீட்பு நிவாரணப் பணிகள் வெற்றியடையவும், காயமடைந்தோர் விரைவில் குணம்பெறவும் வேண்டிக்கொள்வதாகக் குறப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், டார்ஜிலிங்கில் கனமழையாலும் மண்சரிவாலும் ஏற்பட்டுள்ள நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தைப் பற்றித் தான் கவலையடைந்துள்ளதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணம்பெற வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள செய்தியில், டார்ஜிலிங்கில் கனமழையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது ஆழ்ந்த வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிந்தோரின் குடும்பத்தினரைப் பற்றித் தான் கவலைகொண்டுள்ளதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணம்பெற வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் படைகளை அனுப்ப உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள அறிக்கையில், நேற்றிரவு முதல் பெய்த கனமழையால் ஆறுகளில் கரைபுரண்டு வெள்ளம் பாய்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சிக்கிம், பூடான் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வெள்ளத்தால் பேரழிவு நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
