
ஆரோக்கிய பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கிய உணவுகளே உடல்நலத்தை பாதுகாக்க அவசியமானதாக இருக்கிறது.
பெரும்பாலும் காலை உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் அன்றைய நாள் மிகவும் சுறுசுறுப்பானதாக இருக்கும். ஆரோக்கிய உணவுகள் என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது ஓட்ஸ்.
வழக்கமாக ஓட்ஸை கஞ்சியாகத்தான் சாப்பிடுவோம், ஆனால் ஓட்ஸை பல சுவையான வழிகளில் சமைக்கலாம். அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்ஸ் இட்லி.
இந்த ஓட்ஸ் இட்லி செய்வதற்கு எளிமையானது, சுவையானது அனைத்திற்கும் மேலாக ஆரோக்கியமானது. இந்த ஆரோக்கியமான காலை உணவை எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் ஓட்ஸ்
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- அரை ஸ்பூன் உளுந்து
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- அரை ஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை 1 கொத்து
- அரை ஸ்பூன் துருவிய இஞ்சி
- 2 நறுக்கிய பச்சை மிளகாய்
- 1 துருவிய கேரட்
- கால் ஸ்பூன் மஞ்சள்
- அரை கப் ரவை
- அரை கப் தயிர்
- 1 கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
- 10 முந்திரி
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெயைச் சூடாக்கி, 1 ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்தம்பருப்பு, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, ½ ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைத் தூவி, ½ ஸ்பூன் துருவிய இஞ்சி மற்றும் 2 பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும்.
- இவை வதங்கியதும் 1 நறுக்கிய கேரட் மற்றும் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இப்போது ½ கப் ரவையைச் சேர்த்து, குறைந்த தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர்
- ஓட்ஸ் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும்.
- நன்கு ஆறியதும் அதில் ½ கப் தயிர் மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து, கட்டிகள் எதுவும் இல்லாதபடி நன்கு கலக்கவும்.
- இப்போது 2 ஸ்பூன் கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.
- இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலக்கவும்.
- இந்தக் கலவையை 20 நிமிடங்கள் அல்லது ரவை தண்ணீரை உறிஞ்சும் வரை வைக்கவும்.
- இப்போது இந்த மாவை வழக்கமாக இட்லி வேக வைப்பது போல இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.
- இட்லி நன்கு வெந்ததும் அதைத் தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி ரெடி!
