ஹரிஷ் மரணத்தில் திடீர் திருப்பம்.. யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது..!

புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயதான ஹரிஷ், கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் ‘Finance With Harish’ என்ற பெயரில் நிதி, சேமிப்பு, முதலீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து வந்தார். அவருடைய சமூக வலைதளப் பக்கங்களை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்தனர்.  இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் அறிமுகமான நிதி உள்ளடக்கப் படைப்பாளராக இவர் விளங்கினார்.

ஹரிஷ் வழங்கி வந்த நிதி ஆலோசனைகள் தொடர்பாக மற்றொரு யூடியூபரான ஜேசன் சாமுவேல் கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, ஹரிஷ் பங்குச் சந்தை மற்றும் முதலீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்குத் தேவையான செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர் உரிமத்தைப் பெற்றுள்ளாரா என்பது குறித்து அவர் விமர்சித்தார். மேலும், ஆம்பீ (AMFI) பதிவு தொடர்பாகவும் ஹரிஷ் தவறான தகவல்களை வழங்கியதாக ஜேசன் குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோ அக்டோபர் 18ஆம் தேதி வெளியானது.இருப்பினும் அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் நிதி ஆலோசனை தொடர்பான விதிமீறல்கள் இருந்தனவா என்பது குறித்து உரிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டியிருக்கு.இந்தச் சர்ச்சைக்கு முன்னதாகவே, செப்டம்பர் மாதத்தில் ஹரிஷின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் புதிய கணக்கைத் தொடங்கிய நிலையில், அதுவும் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் தனது ஐந்து ஆண்டுகால உழைப்பும், சமூக வலைதளங்களில் உருவாக்கிய அடையாளமும் பாதிக்கப்பட்டதாக ஹரிஷ் கருதியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அதில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டிய கேள்விகள் எழுந்துள்ளன.

உயிரிழப்பதற்கு முன்பு ஹரிஷ் ஒரு வீடியோவைப் பதிவு செய்திருந்ததாகவும், அதில் ஜேசன் சாமுவேல் தன்னைத் தொடர்ந்து விமர்சிப்பதாகவும், தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கச் செய்வதாக மிரட்டியதாகவும் ஹரிஷ் கூறியிருந்ததாக அவரது தந்தை புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தனது நற்பெயருக்கும் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டதாக ஹரிஷ் அந்த வீடியோவில் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவின் உள்ளடக்கம், அதன் உண்மைத்தன்மை மற்றும் அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில், அக்டோபர் 20ஆம் தேதி சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் ஹரிஷ் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் சமூக வலைதளப் படைப்பாளர்கள் மற்றும் அவரைப் பின்தொடர்ந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சந்தேக மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கானத்தூர் காவல்துறையினர், மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தத் தொடங்கினர்.

ஹரிஷின் தந்தை விநாயகம், தனது மகனின் மரணத்திற்கு இணையவழித் துன்புறுத்தல், அவதூறு பதிவுகள் மற்றும் மிரட்டல்கள் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டி கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குறிப்பாக, ஜேசன் சாமுவேல் வெளியிட்ட வீடியோக்களும் பதிவுகளும் தனது மகனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் தொடர்பான விசாரணையுடன் சேர்த்து, தற்கொலைக்குத் தூண்டுதல் தொடர்பான பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை விரிவுபடுத்தினர். ஹரிஷின் வீடியோ, சமூக வலைதளப் பதிவுகள், மிரட்டல் செய்திகள் மற்றும் பிற மின்னணு ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜேசன் சாமுவேல் மறுத்துள்ளார். ஹரிஷைத் தனிப்பட்ட முறையில் துன்புறுத்துவது தனது நோக்கம் அல்ல என்றும், அவர் நிதி ஆலோசனை வழங்குவதற்கான உரிமம் மற்றும் தகுதிகள் தொடர்பாகவே கேள்வி எழுப்பியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஹரிஷின் மரணம் தமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரிஷின் தந்தை முன்வைத்த குற்றச்சாட்டுகளும், ஜேசன் சாமுவேல் அளித்த மறுப்பும் காவல்துறை விசாரணையின் மூலம் ஆதாரங்களுடன் ஆராயப்பட வேண்டியிருக்குது. ஆக மொத்தத்தில் இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதற்கும், ஒருவரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்து இணையவழியில் துன்புறுத்துவதற்கும் இடையிலான வேறுபாடு குறித்து முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிதி ஆலோசனை வழங்குபவர்களின் தகுதி மற்றும் உரிமங்களைப் பொதுமக்கள் சரிபார்ப்பது அவசியம். அதேவேளையில், குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது ஆதாரங்களுடன் பொறுப்புடன் செயல்படுவதும், இணையவழித் துன்புறுத்தலைத் தவிர்ப்பதும் முக்கியம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *