Gutka Smuggle: மினி லாரியில் அறை அமைத்து குட்கா கடத்தல்!

Advertisements

தென்காசி அருகே மினி லாரியில் அறை அமைத்து குட்கா கடத்திய இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்பு சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது பறங்குன்றாபுரம் விளக்கு பகுதி.  இந்த பகுதியில் சுரண்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியே மினி காய்கறி லாரி ஒன்று வந்துள்ளது. அதனை மறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் காய்கறி லாரி என எழுதப்பட்டிருந்த மினி லாரியின் பின்பக்க தொட்டியை பார்த்தபோது அதனுள் பேஸ்ட், பிரஸ் மற்றும் மளிகை பொருட்கள், மிட்டாய் பொருட்கள் அட்டை பெட்டிகளில் இருந்துள்ளது.

உடனடியாக காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது மினி லாரியின் டிரைவர் என்றும் தனது பெயர் கார்த்திக் என்றும் பரங்குன்றாபுரம் கிராமம் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காய்கறி ஏற்றும் வண்டியில் ஏன் மளிகை பொருட்களை ஏற்றி செல்கிறாய் என டிரைவரிடம் போலீசார் கேட்டதும் கார்த்திக் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். உடனே சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ய தொடங்கினர்.

அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக மினி லாரியின் பின்பக்க தொட்டியின் அடியில் மினி அறை ஒன்று இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து இரும்பு போல்டுகள் போட்டு தகர சீட்டுகளை கொண்டு தொட்டியை போன்றே பெயிண்ட் அடித்து அமைக்கப்பட்டிருந்த தனி அறையை ஸ்பேனர்கள் உதவியுடன் அதனை திறக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அதனை திறந்து பார்த்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், அந்த மினி அறையில் ரேக்குகள் போன்று அமைத்து அதில் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது தெரிய வந்தது.

கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சுமார் மூன்றரை லட்சம் மதிப்பிலான 12 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். டிரைவர் கார்த்திக்கிடம்  தொடர்ந்து நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் மினி லாரியின் உரிமையாளர் பரங்குன்றாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (39) என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இளங்கோவன் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர்.

அப்பொழுது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் பைக்கை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது சொகுசு காரின் டிக்கியிலும் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா மூட்டைகளை அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று விற்பனை செய்வதற்காக இளங்கோவன் பயன்படுத்தி வந்த  பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்பு 12 மூட்டை குட்கா, அதனை விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய மினி பாதாள அறையுடன் அமைக்கப்பட்டு இருந்த மினி லாரி, சொகுசு கார் மற்றும் பைக் ஆகிய மூன்றையும் பறிமுதல் செய்து சுரண்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் டிரைவர் கார்த்திக் மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி   பின்பு சிறையில் அடைத்தனர்.

குட்கா கடத்துவதற்கென படங்களில் வருவதைப் போன்று  மினி லாரியில் மினி அறையை அமைத்து போலீசாரையே அதிர செய்யும் வண்ணம் கிரிமினல் மூளையுடன் செயல்பட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை துரிதமாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த போலீசாரை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *