Gujarat Boat Accident: 18 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு!

குஜராத்தில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 12 பேரும், 2 ஆசிரியர்களும் பலியானார்கள்.

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் வதோதராவுக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உல்லாச பயணமாக வந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள ஹர்ணி ஏரியில் படகு சவாரி மேற்கொண்டனர். அப்போது, திடீரெனப் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர் இதுபற்றி உடனடியாகத் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர்கள் வருவதற்குள் 12 மாணவர்கள் மூச்சுத்திணறி பலியானார்கள்.

மேலும் 2 ஆசிரியர்களும், ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடலும் மீட்கப்பட்டது. இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏரியில் தத்தளித்துக்கொண்டு இருந்த 20 பேரை மீட்டனர். சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், வதோதரா படகு விபத்து தொடர்பாக 18 பேர்மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *