
சென்னை திருமுல்லைவாயலில் கஞ்சா போதையில் பொதுமக்கள் 12 பேரைச் சரமாரியாகக் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை கணபதி நகர் பகுதியில் அபினேஷ் (25), விஷ்ணு (22) மற்றும் முத்து ஆகிய மூன்று இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எந்நேரமும் மது மற்றும் கஞ்சா போதையில் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் அமர்ந்து கொண்டு சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்வதையே பொழப்பாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை மூன்று பேரும் ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் மாறி மாறித் திட்டிக் கொண்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பெண்களைத் தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (38) என்ற பெண் மூவரையும் கண்டித்துள்ளார்.
இதனையடுத்து மூவரும் சீதாலட்சுமி அவரது மகன் கமலேஷ் (17) ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் சீதாலட்சுமி மற்றும் அவரது மகன் கமலேஷை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற சந்திரலேகா, அவரது மகன் விஜய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் சாலையில் சென்றவர்கள், இருசக்கர வாகனத்ததில் வந்தவர்களுக்கும் அரிவாளால் வெட்டு விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் மறைந்து இருந்த அபினேஷ் மற்றும் விஷ்ணு ஆகியவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முத்துவை தீவிரமாகப் போலீசார் தேடி வருகின்றனர்.

