
கணபதி பப்பா மோரியா…
மோரியா ரே… பப்பா மோரியா ரே…
அனைத்து கணங்களுக்கும் அவனே அதிபதி…
அவன் தான் கணபதி…
வினைகளைக் களைபவன் விநாயகன்…
முழுமுதற் கடவுள் கணேசன்.முதலில் இவரை வணங்கி விட்டுத்தான் மற்ற தெய்வங்களை வணங்குவர். எல்லா கோவில்களிலும் இவர் தான் முதலில் இருப்பார்.அதெ போல் எந்தக் காரியம் தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டே ஆராம்பிக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.அப்போதுதான் தொடங்கும் செயல் அமோகமாக இருக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
ஐந்து கரத்தன்… ஆனை முகத்தோன் மூஷிக வாகனன்…மோதகப் பிரியன். இப்படி பலப்பல செல்லப் பெயர்களால் வழங்கப்படுபவர் தான் பிள்ளையார். கையில் மாங்கனியோடு அமர்ந்திருப்பார்.மாம்பழம் என்றால் ரொம்பப் பிடிக்குமோ??அது ஒரு கதை. நாரதர் ஒரு மாங்கனியை சிவன், பார்வதியிடம் கொடுக்க அந்தப் பழத்திற்கு முருகனும் பிள்ளையாரும் போட்டி போட, ஒரு போட்டி வைக்கப்ப்டுகிறது. அதாவது உலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே பழம். முருகன் மயிலோடு புறப்பட நம்ம பிள்ளையாரோ அப்பா அம்மாவைச் சுற்றி பழத்தைப் பெற்றுக் கொண்டார். அன்றிலிருந்து பழத்தொடு தான் காட்சி தருவார்.

மனித உடலும் யானை முகமும் எப்படி வந்தது? பார்வதி அம்மையார் குளிக்கச் சென்றபோது மனித உருவில் பொம்மை செய்து உயிர் கொடுத்துச் சென்றார். அங்கு வந்த சிவனை உள்ளே செல்ல் அனுமதிக்கவில்லை. இதனால் கோபமுற்ற சிவன் தலையைக் கொய்து போட்டு விடப் பார்வதி கோபமுற்றார். கணங்களை ஏவி முதலில் கிடைக்கும் தலையைக் கொய்து வரும் படிக் கூற , யானைத்தலை கொய்து வரவே அதையே பிள்ளையாரின் தலையாக மாரிப் போனது.
நம்ம எல்லோருக்கும் பிறந்த நாள் வரும்போது ஹாப்பி பர்த்டே கொண்டாடுவோம். அதே போல நம்ம கணபதிக்கும் ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தியன்று பர்த்டே… நாடு முழுவதும் அவரது பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தி எனும் பெயரில் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்…
களி மண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகள் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே விற்பனைக்கு வரும்.

வட மாநிலங்களில் மிக ப்ரம்மாண்டமாகக் கொண்டாடுவர். வெவ்வேறு வடிவங்களில், வண்ணங்களில், அழகுற சிலைகள் செய்து அனைவரது வீடுகளிலும் கொடையோடு வாங்கி வந்து வைத்து, கொழுக்கட்டை எள்ளுருண்டை பொரி எல்லாம் செய்து, வெற்றீலை பாக்கு பழங்கள் வைத்துப் பூஜை செய்வர். அது மட்டுமல்லாது வீதிகளிலும் ஆங்காங்கே இவரின் சிலை வைக்கப்பட்டு வண்ண விளக்குகள் வைத்து ஜோடித்து வழிபடுகிறார்கள். கணேஷ் உத்சவ் என்றும் சொல்லுவதுண்டு.சுமார் 10 நாட்கள்வரை திருவிழாவாக வெகுவிமரிசையாகக் கொண்டாடுவர்.

இந்துக்கள் கொண்டாடும் இவ்விழாவின் இறுதியில் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.அன்றும் அவர் ஊர்வலமாக ஆட்டம், பாட்டத்துடன் செல்லும் நிகழ்வு பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.



