G7 Summit Italy 2024 :பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்!

இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி நாளை இத்தாலி செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இத்தாலி செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 13ஆம் தேதி (நாளை) முதல் 15ஆம் தேதிவரை இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி செல்லவுள்ளதாகத் தெரிகிறது.

பொருளாதாரத்தில் மேம்பட்ட ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் உள்ள போர்கோ எக்னாசியா என்ற சொகுசு ரிசார்ட்டில் நடைபெறவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஆகியவை ஜி7 உச்சிமாநாட்டில் அதிகம் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் ரஷ்ய படையெடுப்பு குறித்து ஜி7 அமர்வில் உரையாற்ற உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர, அமெரிக்க அதிபர் ஜோப்பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். மோடியின் இத்தாலி பயணம்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 13ஆம் தேதி இத்தாலிக்குப் புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மோடி, ஜூன் 14ஆம் தேதிபின் இரவில் திரும்புவாரெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறைச் செயலர் வினய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இத்தாலி செல்லும் எனத் தெரிகிறது.

ஜி7 மாநாட்டையொட்டி, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பு உள்ளிட்ட பல இருதரப்பு பேச்சுவார்த்தைகளைப் பிரதமர் மோடி நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *