Free Medical Camp: 25 இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள்!

Advertisements

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் 25 இடங்களில் வரும்14-ம் தேதி(நாளை மறுநாள்) இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இதற்கிடையே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி வருகிறார்கள். அதன்படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலமாக சென்று விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவுகளையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் சென்னையில் 25 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்த விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 14ம் தேதி காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு உட்பட்ட 25 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை-க்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் வரும்14-ம் தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இம்முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *