Farmers Protest: புதுக்கோட்டை – தஞ்சாவூர் எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம்!

Advertisements

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகமத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை-தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் இரண்டு மாவட்ட விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுடில்லியில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின்போது இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில், மத்திய அரசைக் கண்டித்தும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நியாயம் கோரியும் புதுக்கோட்டை-தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு, டிராக்டர் பேரணி நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

இதனையடுத்து புதுக்கோட்டை – தஞ்சாவூர் மாவட்ட எல்லைப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டி பகுதியில் திரண்ட இரண்டு மாவட்ட விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் வேண்டுகோளை ஏற்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் தவிர்த்து விட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தாத விவசாயத் திட்டங்களையும், விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டங்களையும் விவசாயிகள் விளக்கிப் பேசினர்.

இதனிடையே, விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகப் பாஜக அரசின் சாதனைகளை விளக்கிக் கூட்டம் நடத்தப் போவதாகப் பாஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் சாலையின் மற்றொரு புறத்தில் திரண்ட பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

திரண்டிருந்த 50க்கும் மேற்பட்ட பாஜகவினரிடம் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேன்தமிழ்வளவன் மற்றும் ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பவுல் ராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் போராட்டம் நிறைவடைந்த பிறகு தாங்கள் கூட்டம் நடத்திக் கொள்வதாகவும் அதுவரை அமைதியாகக் காத்திருப்பதாகவும் பாஜகவினர் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து விவசாயிகளின் போராட்டம் நிறைவடைந்த பிறகு பாஜகவினர் சிறது நேரம் மத்திய அரசின் சாதனைகளை விளக்கிப் பேசிவிட்டு கலைந்து சென்றனர்.

இரண்டு தரப்பிலும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திரண்டதால் இரண்டு மாவட்ட காவல்துறையின் சார்பிலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் இரு மாவட்ட எல்லைப் பகுதியும் கடும் பரபரப்பாகக் காட்சியிளித்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *