எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சேதம்!

Advertisements

மஞ்சூர்:

 காட்டுக்குப்பை மின் திட்டப் பணிகளுக்காக எமரால்டு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் வேகத்துக்குத் தாக்குபிடிக்க முடியாமல், எமரால்டு கூட்டு குடிநீர் திட்டக் குழாய்கள் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள காட்டுக்குப்பை பகுதியில் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் 500 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் குந்தா நீரேற்று புனல்மின் திட்டத்துக்கான பணிகள் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

2022-ம் ஆண்டுப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இதுவரை 70 சதவீத பணிகளே முடிந்துள்ளன. இன்னும் இந்தப் பணிகள் முடிய ஒரு ஆண்டு ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காட்டுக்குப்பை பகுதியில் நடைபெற்று வரும் நீர் மின் உற்பத்தி நிலைய பணிகளுக்காக எமரால்டு அணையில் உள்ள நீரை வெளியேற்ற மின்வாரியம் சார்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 10-ம் தேதி முதல் எமரால்டு அணை திறக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் என 30 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையிலிருந்து தண்ணீர் 200 அடி முதல் படிப்படியாக ஆயிரம் கன அடியாகத் திறந்து விட்டபோது அணையிலிருந்து வெளியேறிய நீர் கரை புரண்டு ஓடுகிறது.

தண்ணீர் திறக்கப்பட்ட முதல் நாளே எமரால்டு நகரில் உள்ள கோவிலையும், மலை கிராமங்களுக்குச் செல்லும் சாலையும் தண்ணீரில் பாதியளவு மூழ்கியது. இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. நிதி திட்டத்தில் ரூ.8.5 லட்சத்தில் முள்ளிகூர் ஊராட்சியில் எமரால்டு ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்டு வந்த விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான அறை இடிந்து சேதமானது.

இந்நிலையில் தற்போது எமரால்டு அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் வேகம் தாங்காமல் மண்ணரிப்பு ஏற்பட்டு, எமரால்டு பஜார் பகுதியில் உள்ள எமரால்டு கூட்டு குடிநீர் திட்டக் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் செல்வகுமார், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் சங்கீதா மற்றும் சித்ரா தலைமையிலான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து எமரால்டு அணையிலிருந்து தண்ணீரை நிறுத்தி உடனடியாகக் குடிநீர் குழாய்களைச் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்களை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் குன்னூர், பேரக்ஸ் உட்பட முக்கிய இடங்களுக்குக் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *