DPI Complex: போராட்ட களமாக மாறிய வளாகம்!

பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தைத் தொடர்வதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகம், சில தினங்களாக ஆசிரியர்களின் போராட்ட களமாக மாறி உள்ளது. சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஐந்து நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தாமல், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து சங்கத்தினரும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மழையிலும், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்தது. அப்போது ஒன்பது பேர் மயங்கி விழுந்தனர். நேற்று, 11 பேர் மயங்கி விழுந்தனர். அனைவரும் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த நிலையில் இன்றும்  ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, சங்கங்கள் அறிவித்துள்ளன.

டி.பி.ஐ., வளாகத்தல், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *