
திமுக தீய சக்தி என்றும், அதை விரட்ட வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தூய சக்தி என்றும் விஜய் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார்.
அப்போது விஜய்க்குச் செங்கோட்டையன் வெள்ளிச் செங்கோலைப் பரிசளித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, தாங்கள் பேசினால் அது சினிமா டயலாக் எனக் கூறித் திமுகவினர் கிண்டலடிப்பதாகத் தெரிவித்தார். தன்னுடைய கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே? என்று முதலமைச்சர் பேசியது மட்டும் சிலப்பதிகார வரிகளா என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
திமுகவின் பொதுக்கூட்டத்தில் கூடியது காசுக்காகக் கூடிய கூட்டம் என்றும், தங்கள் கட்சி கூட்டியது தனது மீது அன்பு வைத்துள்ள மக்களின் கூட்டம் என்றும் விஜய் கூறினார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றஞ்சாட்டினார். மக்களுக்குப் பணத்தைக் கொடுத்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் திமுக தீய சக்தி என்று கூறினார்.
அந்தத் திமுகவை விரட்டிவிட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் தமிழக வெற்றிக் கழகம் தூய சக்தி என்றும் விஜய் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்துக்கு வந்திருப்போர் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குப் போய்ச் சேர வேண்டும் என்றும் அதுவே தனது விருப்பம் என்றும் தொண்டர்களை விஜய் கேட்டுக்கொண்டார்.


