
மாடல் அழகி சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது, விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
குருகிராம்: அரியானாவின் குருகிராம் நகரில் அதிகம் தேடப்படும் தாதாவாக அறியப்பட்டவர் சந்தீப் கடோலி. கடந்த 2016-ம் ஆண்டு இவர் சுட்டு கொல்லப்பட்டார். இவருடைய காதலியான திவ்யா பகுஜா உதவியுடன் கடோலி வரவழைக்கப்பட்டு, போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டாரென மும்பை போலீசார் அப்போது தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய மாடல் அழகியான 27 வயதுடைய திவ்யா பகுஜாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. இதனையடுத்து வெளியே வந்த அவர், குருகிராம் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சுட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. முக்கிய குற்றவாளியான அபிஜீத் சிங் (வயது 56), அவருடைய கூட்டாளிகளான ஹேம்ராஜ் (வயது 28) மற்றும் ஓம்பிரகாஷ் (வயது 23) ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டல் உரிமையாளரான சிங்கிடம் விசாரித்ததில், திவ்யா பணம் கேட்டு அச்சுறுத்தி வந்ததுடன், சிங்குடன் இருந்த ஆபாச படங்களைக் காட்டி அவரை மிரட்டி வந்துள்ளார் என்றும் தெரிய வருகிறது. எனினும், திவ்யாவின் குடும்பத்தினர் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தனர்.
இதனால், போலீசார் சி.சி.டி.வி. வீடியோவைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், ஓட்டல் உரிமையாளரான சிங் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து திவ்யாவின் உடலை வெள்ளை நிற துணி ஒன்றால் சுற்றி ஓட்டலிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
அவர்கள் உடலைப் பி.எம்.டபிள்யூ. காரில் ஏற்றியுள்ளனர். இதன்பின்னர், வேறு 3 பேரைச் சிங் அழைக்கிறார். அவர்கள் திவ்யாவின் உடலுடன் காரை ஓட்டிச் சென்றனர்.இந்தக் காட்சிகளைக் கொண்டு முதன்மை குற்றவாளியான சிங்கை போலீசார் முதலில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஹேம்ராஜ் மற்றும் ஓம்பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்குடன் தொடர்புடைய மற்ற நபர்களையும் மற்றும் திவ்யாவின் உடலையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

