
அமெரிக்க மாணவனுக்கு அட்மிஷன் தர முன்வந்த 185 கல்லூரிகள்…
கற்கண்டாய் இனிக்கும் கல்லூரி வாழ்க்கை. பள்ளி வாழ்க்கை என்பது விளையாட்டு பருவத்தில் திளைக்கும். ஆனால் கல்லூரி வாழ்க்கையோ படிப்பும் இருக்க வேண்டும், சமுதாய நோக்கத்தோடு எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஒரு அம்சமாகவும் விளங்குகிறது.
நம் ஒவ்வொருவருக்கும் கல்லூரி வாழ்க்கை என்பது மறக்க முடியாத ஒன்றாகும்.
அப்படி வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத நினைவுகளைத் தரும் கல்லூரிகளில் அதுவும் நமக்கு மிகவும் பிடித்தமான கல்லூரிகளில் சேர்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அப்படி நாம் விரும்பும் கல்லூரிகளில் உடனே இடம் கிடைத்து விடுமா என்றால் அது தான் இல்லை. அமெரிக்காவில் ஒரு மாணவன் 200 கல்லூரிகளில் அப்ளிகேஷன் போட்டுள்ளார்.
அவற்றில் 185 கல்லூரிகள் அந்த மாணவனைச் சேர்த்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளன. இப்படி அதிகபட்ச கல்லூரிகளிலிருந்து அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர் என்பதற்காக அந்த மாணவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற உள்ளார் என்பது சுவாரஸ்யமானதாக உள்ளது. யார் அந்த மாணவர்?

அந்த மாணவன் பெயர் டென்னிஸ் பேர்ன்ஸ். லூசியானா மாகாணத்தில் உள்ள இண்டர்நேஷனல் ஹைஸ்கூல் ஆஃப் நியூ ஆர்லியனஸ் பள்ளியில் படித்துள்ளார். இவர் கடந்த ஆண்டுப் பள்ளி படிப்பை முடித்தவுடன் ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினார். தற்போது வரை சுமார் 200 கல்லூரிகளுக்கு டென்னிஸ் விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தார். இப்போது அவருக்கு 185 கல்லூரிகள் அட்மிஷன் தர முன் வந்துள்ளன. மேலும் அவருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 80 கோடிவரை கல்வி உதவித் தொகை வழங்கவும் கல்லூரிகள் முன்வந்திருக்கின்றன.
இது தொடர்பாக டென்னிஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேடடியில் “10 மில்லியன் உதவி தொகை பெற வேண்டும். இதுவே எனது இலக்கு. நான் அதிகமான கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணிப்பிக்க, எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. அதேபோல, கல்வி உதவி தொகையும் எனது அட்மிஷனை ஏற்று கொண்ட கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே சென்றது. எனது ஆர்வம் அதிகரித்து கொண்டே சென்றது” என்று கூறியிருக்கிறார்.
இறுதியாகக் கார்னெல் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க முடிவு செய்துள்ளார். அங்குக் கணிணி அறிவியல் மற்றும் சட்டம் என இரட்டை பட்டப் படிப்புகளைப் படிக்க இருக்கிறாராம் டென்னிஸ். அவரின் கல்வி ஆலோசகர் டேனிஸ் ஜேம்ஸ் தான் யோசனை கூறியதாகத் தெரிவிக்கும் அந்த மாணவர், ஒரு நாள் உன் மெயில் பாக்ஸ் நிரம்பி வழியப் போகிறது.
உனக்குத் தபால் கொண்டு வந்து கொடுத்தே போஸ்ட் மேன் களைத்துப் போகப் போகிறார் என்ற அவரின் வார்த்தைகள் உண்மையாகின. விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்கிறார் இந்த 16 வயது மாணவர். இவரது சாதனையைக் கின்னஸ் நிறுவனத்திற்கு தெரிவித்து சாதனையாக அங்கீகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறதாம் டென்னிஸ் பேர்னஸ் படித்த பள்ளி நிர்வாகம். மனம் தளராமல் செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் நிச்சயம் பலன் கிட்டும் என்பது தெரிகிறது.


