நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்த மசோதாவை ஆதரிக்க திமுக முடிவெடுத்ததற்கான காரணத்தை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியுள்ளார்.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மசோதாவை திமுக எதிர்த்தால், பாஜக மீண்டும் இந்த மசோதாவைக் கொண்டுவந்து எப்படியாவது நிறைவேற்ற முயற்சிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறுகையில், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 31-ஆகக் குறையும் அபாயம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதுடன், தேசிய அளவில் மாநிலத்தின் அரசியல் செல்வாக்கும் குறையக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய பிரதிநிதித்துவ விகிதம் பாதுகாக்கப்பட்டால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் உரிமையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை நடைபெறுவதைத் தவிர்க்கவும், தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் திமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, நவம்பர் 28-ஆம் தேதி திமுக தலைமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவே மசோதாவை ஆதரிக்கிறோம் என்ற திமுகவின் விளக்கம், தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


