
புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பி.ஆர்.எஸ்., கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் இன்று(ஆகஸ்ட் 27) ஜாமின் வழங்கியது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் தொடர்புடையதாக கூறி, தெலுங்கானாவின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 15ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது.
விசாரணை
அவர் கடந்த 6 மாதங்களாக டில்லி திஹார் சிறையில் இருந்தார். இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.சமீபத்தில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி இருந்த மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது. தனக்கும் ஜாமின் வழங்க கோரி, கவிதா தரப்பில் சுப்ரீம் கோட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
சரமாரி கேள்வி
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘கவிதா குற்றவாளி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. நேர்மையாக விசாரணை நடந்ததா?. விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது’ என விசாரணை அமைப்புகளிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், கவிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.



