சபரிமலையில் தொடர் கனமழை!

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகச் சபரிமலையில் மழை பெய்தது.

இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களாகக் கனமழை மற்றும் மூடு பனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

இந்தநிலையில் சபரிமலை பகுதியில் இன்று 3-வது நாளாக மழை பெய்தது. மேலும் அருகில் உள்ள வர்கள் தெரியாத அளவுக்குப் பனிமூட்டமும் பயங்கரமாக இருந்தது. இருந்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் இன்று சபரிமலைக்கு வந்தனர்.

ஆனால் மற்ற நாட்களைவிடக் குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை இருந்தது. சபரிமலையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதே பக்தர்கள் வருகை குறைவாக இருப்பதற்கு காரணம் என்று கூறுப்படுகிறது. பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததால் சன்னிதானம் உள்ளிட்ட எங்கும் நெரிசல் இல்லை.

வலிய நடைப்பந்தலில் அதிகாலை கோவில் நடை திறந்ததிலிருந்து, சில மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். அதன்பிறகு பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் பதினெட்டாம் படி ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

மழை ஓரளவுக்கு குறைந் திருப்பதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதுவும் இல்லை. இதனால் அங்குக் குளிக்கத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை.

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வந்தபடி இருக்கின்றனர். தினமும் எரிக்கப்படும் 15,400 கிலோ குப்பையில், 3,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *