Congress: காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனை.. தமிழக காங்கிரஸ் பட்டியல் பற்றி இறுதி முடிவு?

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காகப் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தேர்தல் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டத்தில் தமிழ்நாடு வேட்பாளர்கள்பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் கவனம் செலுத்திய அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்கள் தேர்வுகுறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. திரிணாமுல் காங்கிரசும் மேற்கு வங்காள மாநிலத்தில் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெறுகிறது. பாஜக கூட்டத்தில், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று மாலை டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், அரியானா, டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள்பற்றி விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார். சோனியா, ராகுல் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த எட்டாம் தேதி வெளியான காங்கிரஸ் முதல் பட்டியலில் 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களில் 16 பேர் கேரளாவில் இருந்தும் ஏழு பேர் கர்நாடகாவில் இருந்தும் ஆறு பேர் சத்தீஸ்கரில் இருந்தும் நாலு பேர் தெலங்கானாவில் இருந்தும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு சமூகமாக முடிவடைந்து காங்கிரசுக்கு புதுச்சேரி உள்ளிட்ட பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைப் பரிசீலித்து வேட்பாளர்கள் யார் யார் என்பது இறுதிச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *