Sandeep Roy Rathore: அரசியல் பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை!

Advertisements

சென்னையில் கொலை, குற்றங்கள் குறைந்துள்ளதாகச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாகக் கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்தக் கொலைக்கான காரணம்குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொலை சம்பவம் தொடர்பாகச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கினர். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் போலீஸ்க்கு எந்தத் தகவலும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாகத் தகவல் இல்லை. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் உளவுத்துறையினர் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். தேர்தல் நடத்தை விதி காரணமாகக் காவல்துறையிடம் ஒப்படைத்த துப்பாக்கியை ஜூன் 13ம் தேதியே ஆம்ஸ்ட்ராங் திரும்பப் பெற்றுவிட்டார்.

ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. அரசியல் பழிக்குப்பழியாகக் கொலை நடக்கவில்லை.

கைதுச் செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. தற்போதைய தகவலின்படி ஆம்ஸ்ட்ராங் சாதிய காரணங்களுக்காகக் கொலை செய்யப்படவில்லை. முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும். சென்னையில் கொலை, குற்றங்கள் குறைந்துள்ளன. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம்”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *