
கரீபியன் கடற்பகுதியில் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலை அமெரிக்கா நிறுத்தியுள்ளதன்மூலம் போருக்கான முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர் போர்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பலை மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா நிறுத்தியிருந்தது. 90 விமானங்களை நிறுத்தும் வசதிகொண்ட அந்தக் கப்பலை மத்தியத் தரைக்கடலில் இருந்து கரீபியன் கடற்பகுதிக்குக் கொண்டுசெல்ல அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக எனக் கூறிப் போர்க்கப்பல்கள், அணுவாற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், போர் விமானம் ஆகியவற்றைக் கரீபியன் கடற்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, இனி எப்போதும் போரில் ஈடுபடுவதில்லை என்று உறுதிகூறிவிட்டு, மீண்டும் ஒரு போரைத் தொடங்குவதற்கான முன்னெடுப்பில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.


