Brain death: ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானம்!

Advertisements

மூளைச்சாவு அடைந்த ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானம்!

மூளைச்சாவு அடைந்த ஆசிரியை உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குச்சிபாளையம் வெள்ளக்கல்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 56). இவருடைய மனைவி மஞ்சுளா (52). இவர் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

Advertisements

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மஞ்சுளா சென்ற மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் மஞ்சுளாவின் கண், சிறுநீரகம், இதயம், தோல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அளிப்பதாக விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அவரது உடல் அனுப்பப்பட்டது. இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் அரசு மரியாதையுடன் மஞ்சுளாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மஞ்சுளாவின் உடல் நேற்று அவருடைய சொந்த ஊரான குச்சிபாளையம் வெள்ளக்கல்காடு கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று மஞ்சுளாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதவி கலெக்டர் சுகந்தி, தாசில்தார் விஜயகாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அரசு அதிகாரிகள் இறந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் காசோலையை கலெக்டர் உமா, மஞ்சுளாவின் கணவரிடம் வழங்கினார்.

மஞ்சுளாவின் கணவர் ஈஸ்வரன் கூறுகையில் எனது மனைவி விபத்தில் மூளை சாவடைந்து 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி உள்ளார். எனது மனைவியின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *