
பாஜக மதத்தை வைத்து தமிழ்நாட்டில் கால் வைக்க முயற்சி செய்கிறது என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி பகுதியில் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலையை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். இவ்விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, கலைஞரின் சிந்தனையால் தமிழ்நாடு மதச்சார்பற்ற, முற்போக்கான மாநிலமாக உள்ளது என்றும் மத்திய பாஜக அரசு மதத்தை வைத்து தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது கால் வைத்துவிடலாமா என முயற்சி செய்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், வரும் தேர்தலில் மீண்டும் அதிமுகவை தமிழ்நாட்டில் அனுமதித்தால்,தமிழ்நாட்டை பாஜகவுக்கு விற்றுவிடுவார்கள் என்று விமர்சித்தார். மேலும், பாஜகவின் அடிமையாக அதிமுக செயல்பட்டு வருகிறது எனக் குற்றம் சாட்டினார்.



