BJP – TMC: பாஜக – த.மா.க இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி!

Advertisements

பாஜக – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமாகா 4 தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால், 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப் பாஜக முன்வந்துள்ளதால் இழுபறி நிலவுவதாகத் தெரிகிறது.

பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தமாகா கேட்ட மயிலாடுதுறை தொகுதி பாமகவிற்கும், தஞ்சாவூர் தொகுதி அமமுகவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், புதிய தொகுதி கண்டறியவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது ஈரோடு தொகுதியை மட்டுமே தமாகாவுக்கு தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுடன் முதல் ஆளாகச் சென்று கூட்டணி அமைத்தவர் ஜி.கே.வாசன். மேலும், பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகளைக் கொண்டு வந்து சேர்த்ததிலும் வாசனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், அவருடனான தொகுதி ஒப்பந்த பேச்சுவார்த்தையிலேயே இழுபறி நீடித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு தொகுதியில் இந்த முறை திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் என்பவரும், திமுக சார்பில் பிரகாஷ் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொகுதியில் தமாகா சார்பாக அக்கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா, முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் ஆகியோர் பெயர் பரிசீலனையில் இருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் போட்டியிட விரும்பவில்லையெனத் தெரிகிறது. இதனால், அக்கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் விஜயகுமாரை வேட்பாளராக  அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *