
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதாதளக் கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கட்சி 180க்கு மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது உறுதியாகியுள்ளது.
பீகாரில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகா கத்பந்தனுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அனைத்துத் தொகுதிகளுக்கும் முன்னிலை நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் உடனுக்குடன் அறிவித்து வருகிறது. இதில் பாஜக – ஐக்கிய ஜனதாளம் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி 180க்கு மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மகா கத்பந்தன் ஐம்பதுக்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளது.மகா கத்பந்தனின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் ரகோப்பூர் தொகுதியில் ஆறு சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் 219 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதேபோல் துணை முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான சாம்ராட் சவுத்திரி தாராப்பூர் தொகுதியில் 9 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
அலிநகர் தொகுதியில் 8 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக வேட்பாளரும் பாடகியுமான மைதிலி தாக்கூர் ஆறாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். தேர்தலில் மாபெரும் வெற்றியை அடுத்துப் பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதாதளக் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சரும், இந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப்பெரும்பான்மை பெறும் எனத் தான் எதிர்பார்த்ததாகவும், இப்படி மாபெரும் வெற்றியைப் பெறும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, வன்முறையால் ஜனநாயகத்தைத் தடுக்க முடியாது என்று கூறினார்.
தோல்வியை ஏற்க மனமில்லாத எதிர்க்கட்சியினர் வாக்குத் திருட்டு என்று வீணாகக் குற்றஞ்சாட்டி வருவதாகவும் தெரிவித்தார்.பீகார் மக்கள் பிரதமர் நரேந்திர மோடி மீதும், முதலமைச்சர் நிதிஷ்குமார் மீதும் நம்பிக்கை வைத்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பாஜகவின் ஷாநவாஸ் உசைன் தெரிவித்துள்ளார்.




