
பெங்களூருவில் இளம்பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெங்களூருவில் பரபரப்பாக காணப்படும் சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் மார்டன் உடையில் செல்லும் இளம்பெண்களை குறிவைத்து, ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட பெண்களுக்கு தெரியாமலேயே, அவர்களை படம் பிடித்த நபர், அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளார்.
பொது இடத்தில் சுதந்திரமாக உலா வரும் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை டார்கெட் செய்து சித்து வேலையில் இறங்கியுள்ளார்.இந்நிலையில் பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொது வெளியில் நடந்து சென்றபோது, தனக்கு தெரியாமலேயே யாரோ தன்னை வீடியோ எடுத்துள்ளதாகவும், அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த சிலர், தனக்கு ஆபாசமாக மெசேஜ்கள் அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
பெண்களை வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த குருதீப் சிங் என்பது தெரியவந்தது.உடனே அவரை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில் 26 வயதான குருதீப் சிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். இதையடுத்து, மத்திய பெங்களூருவில் உள்ள சர்ச் ஸ்ட்ரீட் பகுதிக்கு செல்போன் மற்றும் கேமராவுடனும் சுற்றித் திரிந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வணிக வளாகங்கள் உட்பட பெரிய பெரிய கடைகள் உள்ளதால் அங்கு ஏராளமான இளம்பெண்கள் ஷாப்பிங் செய்ய வருவது வழக்கம். அவர்களில் மாடர்ன் உடைகளில் வரும் பெண்களை குறிவைத்து குருதீப் சிங் வீடியோ எடுத்துள்ளார்.பெங்களூருவில் பரபரப்பாக காணப்படும் பகுதியில் மார்டன் உடையில் செல்லும் இளம்பெண்களை குறிவைத்து, ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



