Armstrong Murder Case:சிக்கிய திமுக நிர்வாகிகள்! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டதால் கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் பேரில் திமுக கிளை செயலாளர் உள்ளிட்ட மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் புதிதாகக் கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம கும்பலால் சல்லி சல்லியாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரபல கூலிப்படை கும்பலின் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட 11 பேரைப் போலீசார் கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர்கள் 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துச் செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எவ்வளவு பணம் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு 10 நாட்களாக இவர்கள் நோட்டமிட்டதும், கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திருமலையுடன் சேர்ந்து பொன்னை பாலு கூட்டாளிகள் பெரம்பூரில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் மது அருந்தியபடியே திட்டம் தீட்டியுள்ளனர். குறிப்பாக ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்புப் பகுதிகளில் குறிவைத்து வெட்ட வேண்டும். அப்போது தான் விரைவாக உயிர் போகும் என்றும் உடன் வந்த கொலையாளிகளிடம் சொன்னும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தன்று 5 இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் போலி நம்பர் பிளேட்டுக்களை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அந்த இருசக்கர வாகன உரிமையாளர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களில் வாட்ஸ் அப்கால்களில் யார் யாரிடம் பேசி இருக்கின்றனர் என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்குப் பின்னர் வழக்கறிஞர் அருள் தனது உறவினர் வீட்டில் கொலைக்கான ஆயுதங்களை வாங்கி கொடுத்ததும் அருள்தான் என்பதும் தெரிய வந்துள்ளதாகப் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷிடம் இருந்த பழைய ஆயுதங்களோடு, அருள் வாங்கி கொடுத்த ஆயுதங்களையும் சேர்த்து பயன்படுத்தி இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளனர். சம்பவம் முடிந்த பிறகு ஆயுதங்களை அருளிடம் தான் பொன்னை பாலு கூட்டாளிகள் ஒப்படைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

போலீஸ் காவலில் அருளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ஆயுதங்களை அவர் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், அருளின் அக்கா மகன் நரேஷ், சீனிவாசன் ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்து போலீசார் அதனைக் கைப்பற்றி உள்ளனர். மேலும் சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருள் திமுக சேர்ந்தவர் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரு திமுக நிர்வாகிகள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *