
கேரளாவில் பிறந்து, மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி, இப்பொழுது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நடிகை தான் அபர்ணா பாலமுரளி.
கடந்த 1995 ஆம் ஆண்டு திருச்சூரில் பிறந்த பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி. இவருடைய தந்தை கே.பி பாலமுரளி ஒரு இசையமைப்பாளர் ஆவார். தனது இருபதாவது வயதில் இவர் மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “8 தோட்டாக்கள்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்று கொடுத்தது என்றால் அது மிகையல்ல.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான “சூரரை போற்று” என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்த பொம்மி என்கின்ற கதாபாத்திரம் அபர்ணா பாலமுரளிக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இப்பொழுது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துவரும் அபர்ணா பாலமுரளி நடிப்பில் மூன்று மலையாள படங்களும் ஒரு தமிழ் திரைப்படமும் உருவாகி வருகிறது. அந்தப் படம் தனுஷின் “ராயன்” படம் என்பது குறிப்பிடத்தக்கது.


