
வங்கக் கடலில் நிலவும் மோந்தா தீவிரப் புயல், காக்கிநாடா அருகே இன்று மாலை முதல் நள்ளிரவுக்குள் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ள நிலையில் ஆந்திர ஒடிசா மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்திய வானிலை ஆய்வுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், மேற்குமத்திய வங்கக் கடலில் மோந்தா தீவிரப் புயல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவில் தீவிரப் புயல் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது வடக்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவில் இன்று மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது கடலலைகள் வழக்கத்தைவிட ஒரு மீட்டர் உயரம் அதிகமாக எழும்பும் என்றும் எச்சரித்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் புவனேசுவரத்தில் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, வருவாய்த்துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி ஆகியோர் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர், தீயணைப்புத்துறைத் தலைமை இயக்குநர், இந்திய வானிலை ஆய்வுத்துறை இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர்கள் காணொலியில் கலந்துகொண்டு பேசினர்.
இதனால் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான வேறிடங்களுக்குச் சென்றுவிடும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் சிலிக்கா ஏரியின் நடுவே உள்ள கோவிலில் புயலையொட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லை. கடல் அலைகள் கடும் சீற்றமாகக் காணப்படுகின்றன.புயல் பாதிப்பைத் தணிக்கவும் மீட்புப் பணிகளுக்காகவும் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரம், ஒடிசா, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 25 அணிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடப்பதை முன்னிட்டு ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூரில் மீன்பிடி படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆந்திரத்தின் கோதப்பட்டினத்தில் கடலோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். அந்தப் பகுதியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திரத்தின் காக்கிநாடாவில் உள்ள கடற்கரைச் சாலையில் கடும் சீற்றத்துடன் அலைகள் மோதுவதால் எட்டுக் கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலைகள் அரிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


