
சின்னத்திரையில் காதல் ஜோடியாக வலம் வரும் அமீர் – பவானி இருவரும் தங்களது திருமணம்குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்கிற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் பாவனி ரெட்டி. நான்கே மாதங்களில் இந்தச் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்ததாகப் பாசமலர் என்கிற தொடரில் நடிக்கக் கமிட் ஆனார் பாவனி. அந்தச் சீரியலில் நடித்தபோது அவருக்கும் அந்தத் தொடரின் நாயகன் பிரதீப் குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று பிரதீப்பை திருமணம் செய்துகொண்டார் பாவனி.
பிரதீப் உடனான காதல் திருமணம் நான்கு மாதங்களில் முடிவுக்கு வந்தது. பாவனியின் கணவர் பிரதீப் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த பாவனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்கிற சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தச் சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், பாவனிக்கெனத் தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.
பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார் பாவனி. இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீர், பாவனி மீது காதல் வயப்பட்டு, அந்நிகழ்ச்சியிலேயே புரபோஸும் செய்தார். ஆனால் அமீரின் காதலை பாவனி ஏற்க மறுத்துவிட்டார். முதல் காதல் திருமணத்தின் சோகமான முடிவால், அமீருடனான காதலை ஏற்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இதன்பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீரும் பாவனியும் ஜோடி சேர்ந்து நடனமாடினர். இந்நிகழ்ச்சியின்போது அமீருடன் நெருக்கம் ஏற்பட்டதால் அவரது காதலை ஏற்றுக் கொண்ட பாவனி, அவருடன் லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழத் தொடங்கினார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் டைட்டிலையும் இந்த ஜோடி வென்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வரும் இந்த ஜோடியிடம் அடிக்கடி முன்வைக்கப்படும் கேள்வி என்னவென்றால், உங்களுக்கு எப்போது திருமணம் என்பது தான். அதற்கு ஒரு வழியாக இருவரும் விடை கொடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய இவர்கள் வருகிற நவம்பர் மாதம் தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

