Alanganallur Jallikattu: அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

Advertisements

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) காலை உறுதி மொழியுடன் துவங்கிய நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்துப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையே ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

1200 காளைகளும், 800 மாடுபிடி வீரர்களும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் மாலைவரை 10 சுற்றுகள் ஆக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறங்குவர். அதில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவார். போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் சைக்கிள் பீரோ கட்டில் மெத்தை பித்தளை பாத்திரங்கள் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தற்போது 3-ஆம் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 2வது சுற்றில் சிவகங்கையைச் அபிசித்தர் 8 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 8 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டு உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் ஆகியனவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வருகிறார். நடிகர் அருண் விஜய் போட்டியைக் காண வந்துள்ளார்.

அதிக காளைகளைப் பிடிக்கும் மாடு பிடி வீரர்களுக்குத் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும் அதே போன்று பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது.

காயம் படும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்காகச் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை துறை சார்பாகச் சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. காயம்படும் வீரர்களை மற்றும் காளைகளை மீட்க இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அலங்காநல்லூர் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *