கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகர்கள் ஒன்றிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
திரைத்துறையில் தனக்கெனப் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர் அஜித்குமார், ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை அதிகாரப்பூர்வமாகக் கலைத்துவிட்ட போதிலும், அவரது ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கட்சியைத் தொடங்கிப் பேசிய நிர்வாகிகள், தங்களின் தலைவரான நடிகர் அஜித்குமாருக்காக கட்சியின் ‘மாநில பொதுச்செயலாளர்’ பொறுப்பைச் சிறப்பாக ஒதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் நிச்சயமாக இந்த இயக்கத்தில் இணைந்து தங்களை தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்றும் அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏற்கனவே நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சூழலில், தற்போது அஜித் ரசிகர்களும் ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது..


