AI Vijayakanth:விஜய்க்கு அப்போ ஓகே சொன்ன பிரேமலதா… இப்போது மறுப்பதேன்?

Advertisements

AI Vijayakanth: மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லையெனத் தேமுதிக அறிவித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாகக் காணலாம்.

AI Vijayakanth Issue DMDK Official Announcement: தேமுதிகவின் தலைமை கழகம் இன்று பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

இது போன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றன. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்னரே அறிவிப்பை வெளியிட வேண்டும்.

விஜய்காந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த, இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதி இல்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாகத் தமிழ் திரையுலகில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் The Greatest Of All Time திரைப்படத்தில் விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்மூலம் ஒரு காட்சியில் தோன்றுவிதமாகப் படமாக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலின் பரப்புரையின்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அளித்த ஒரு பேட்டியில், GOAT படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இதுகுறித்து முதலில் மகன் சண்முகப்பாண்டியனிடம் பேசியதாகவும், பலமுறை இதுகுறித்து பேச வீட்டிற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பரப்புரைக்கு இடையில் சென்னை சென்றபோதும் தன்னை வந்து வெங்கட் பிரபு சந்தித்து பேசியதாகவும் கூறியிருந்தார். மேலும், விஜயகாந்த் இருந்திருந்தால் இதற்குக் கண்டிப்பாக மறுப்பு சொல்லியிருக்க மாட்டார் என்பதால் தானும் அந்த இடத்தில் இருந்தே யோசிப்பேன் எனவும் பிரேமலதா கூறியிருந்தார். நடிகர் விஜய்யும் தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக வெங்கட் பிரபு தன்னிடம் கூறிய பிரேமலதா தெரிவித்த நிலையில், தேர்தல் பரப்புரை முடிந்ததும் அவரைச் சந்திக்கும்போது நல்ல முடிவாகத் தெரிவிக்கிறேன் எனத் தான் கூறியதாகவும் அவர் அந்தப் பேட்டியில் பேசியிருந்தார்.

மேலும், நடிகர் விஜய் மீதும், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய்காந்திற்கு தனி அன்பு இருந்ததாகவும், நடிகர் விஜயை செந்தூரப்பாண்டியன் படம்மூலம் மக்கள் மத்தியில் பரிட்சயப்படுத்தியது விஜயகாந்த் தான் எனவும் பிரேமலதா அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

இப்போது மறுப்பதேன்?

தேர்தல் முடிவுகளே வெளியாகி ஒரு மாத காலம் நிறைவடைந்த நிலையில், நடிகர் விஜய் – பிரேமலதா ஆகியோர் இதுவரை சந்திக்கவில்லையெனத் தெரியவருகிறது. அந்த வகையில், தற்போது தேமுதிகவின் தலைமை கழகத்திலிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது விஜய்யின் The GOAT திரைப்படத்தில் விஜயகாந்தின் அந்த ஏஐ காட்சி இருக்காது இடம்பெறாது என உறுதிப்படுத்துகிறது. கடந்த ஜூன் 3ஆம் தேதி அன்று நீட் விவகாரம்குறித்த நடிகர் விஜய் பேசியது தமிழக அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிமுகவின் தேமுதிகவின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளைக் கிளப்பியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *