
இந்நிலையில், த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “என் தாயின் இழப்புக்குப் பிறகு கரூரில் என் குடும்பத்தில் ஏற்பட்ட 41 உயிரிழப்புகள் மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளன. தற்போது எந்தவித உரையாடலுக்கும் தயார் நிலை இல்லை. விரைவில் கரூர் சென்று பொதுமக்களுடன் நேரடியாகச் சந்திப்போம். அவர்களுடன் மிகப்பெரிய பயணம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும், இந்திய அரசியலுக்கும், பொது அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையாகவும் இருந்ததாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்காக, அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், த.வெ.க பரப்புரை கூட்டங்களில் பதிவான பேருந்து கேமரா காட்சிகளை ஒப்படைக்க கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோல், த.வெ.க துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் சம்மன் வழங்கப்பட்டது. இந்த சூழலில், ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இதுதொடர்பாக விசாரித்த போது சொந்த அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
