
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மிகவும் அலட்சிய போக்கானது நிலவி வருகிறது. இதற்கு முழுமுதல் காரணம் மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் முறையான கவனிப்பு இல்லாமை தான் .
ஜார்க்கண்டின் சைபாசா நகரில் மாசுபட்ட ரத்தம் ஏற்றப்பட்டதால், ஐந்து குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் சைபாசா நகரில் தலசீமியா மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதுபற்றிய விசாரணையின்போது, ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மாற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியதை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க மாநில அரசு குழு அமைத்து உத்தரவிட்டது.
விசாரணையில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மாசுப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டது தெரியவந்துள்ளதாகக் கூறிய மருத்துவர் தினேஷ் குமார், ரத்த வங்கியில் சில குறைகளைக் கண்டறிந்ததாகவும், அவற்றை களைய மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



