Advertisements

தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய காவிரி நீரை உரிய அளவில் வழங்காததைக் கண்டித்துத் தமிழக அரசும், திமுக தரப்பிலும் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. காவிரி ஒழுங்குமுறை குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துாரை மீறி, கர்நாடகா மிகக் குறைந்த அளவே நீரைத் திறந்துவிட்டதாக மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையின்போது கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தமிழகத்திற்கு நாள்தோறும் 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீரைத் திறந்துவிடக் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவைக் கர்நாடக அரசு முழுமையாகப் பின்பற்றும் என உறுதியளித்தார். மேலும் அவர் கூறுகையில், “கடுமையான சூழல் நிலவியபோதிலும் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற முயன்றுள்ளோம். ஆரம்பத்தில் சில நாட்களில் நீர்வரத்து 6,000 கனஅடியாகக் குறைந்திருந்தாலும், தட்டுப்பாட்டைச் சரிசெய்து வரும் நாட்களில் முழு அளவிலான தண்ணீரும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நீர் திறப்பு நிலவரம் குறித்த முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்யக் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் காவிரி டெல்டா மற்றும் பிற மாவட்டங்களின் நீர் தேவைக் கமித்த நிலவரங்கள் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளன. அதன்படி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 6,500 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4,385 கன அடியிலிருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாகவும், நீர் இருப்பு 43.27 டி.எம்.சி-யாகவும் (மில்லியன் கன அடி) உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, குடிநீர் தேவைக்காக தற்போது 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisements




