
வயநாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்து ஏராளமனோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பருவ மழை தீவிரம்
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாகக் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அங்கு மழையானது கொட்டித்தீர்த்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான நீர் பிடிப்பு பகுதிகள் நிரம்பியுள்ளன. இதனால் கடந்த ஒரு சில வாரங்களாகவே பல இடங்களில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
வீடுகளைத் தரைமட்டமாக்கிய பாறைகள்
இந்தநிலையில் நேற்று மாலை முதல் பெய்த கன மழையால் பெரும்பாலன இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் முண்டக்கை பகுதியில் அமைந்திருக்கும் ரிசார்ட் ஒன்றில் அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மிகப்பெரிய பாறைகள் உருண்டோடியது. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகின. கன மழையை தாண்டியும் பலரது அலறல் சத்தம் கேட்கத் தொடங்கியது. இதனால் அருகில் இருந்த மக்கள் மீட்பு பணியைத் தொடங்கியுள்ளனர்.
1000 பேரின் நிலை என்ன.?
ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வாக அடுத்தடுத்த நிலச்சரிவுகளால் வைத்திரி, மேப்பாடி, வெள்ளேரிமலை பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் இடம் தெரியாமல் மாயமாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் கதி என்ன ஆனது என்றே தெரியாத நிலை உருவாகியுள்ளது.
ஆற்றில் அடித்துச் செல்லப்படும் மனித உடல்கள்
மேலும் மலப்புரம், நீலம்பூருக்கு பாயும் சாலியாறு ஆற்றில் மனித உடல்கள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மனித உடல் பாகங்கள் தனித்தனியாக ஆற்றில் செல்வதாகவும் நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியோடு தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் உயிரிழ்த நிகழ்வும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோண்ட, தோண்ட உடல்கள்
பல இடங்களுக்கு மீட்பு படையினரால் நேரில் செல்ல முடியாத காரணத்தில் ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் மூலமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில் மண்ணில் தோண்ட, தோண்ட மனித உடல்கள் வெளியே வருவதால் மோப்ப நாய்கள் உதவியுடன் மண்ணில் புதைந்தவர்களின் உடலைகளை மீட்கப்பட்டு வருகிறது. வயநாட்டில் நடைபெற்ற இந்தக் கோர சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



