
செங்கல்பட்டு: ‘ஓட்டுக்குக் காசு கொடுக்காமல், அனைவரும் தனித்தனியாக நின்று நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியுமா?’ என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமாருக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: கோவை தொகுதியில் பிரசாரத்தின்போது ஆ.ராசாவை தவிர வேறு எந்தத் தி.மு.க., நிர்வாகியும் பா.ஜ., வை எதிர்த்துப் பேசவில்லை. எந்த மாநிலத்திலாவது பிரதமர் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்துள்ளாரா?. உதயநிதிக்கு தனியாக நேரம் கொடுக்கிறார்.
கோவையில் ஓட்டிற்கு திமுக, அதிமுக ரூ.ஆயிரம் கொடுக்கிறது. பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை ரூ.2ஆயிரம் கொடுக்கிறார். இந்த இடத்தில் காசு கொடுக்கிறார்கள் எனத் தகவல் கொடுத்தால் பல காரணங்கள் சொல்லி, அந்த இடத்திற்கு பறக்கும் படை அதிகாரிகள் செல்வதில்லை.
மாறாக மருத்துவமனைக்கு, கடைக்குப் பொருள்கள் வாங்க போகிறவர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குகிறார்கள். நான் பேசி முடிப்பதற்குள் 12 ஆம்புலன்சுகள் சென்றுவிடும். அதில் தான் பணம் கடத்தப்படுகிறது.
என்னிடம் ஏன் ரெய்டு வருவதில்லை? ஏனென்றால் என்னிடம் எதுவும் இல்லை. ஓட்டுக்குக் காசு கொடுக்காமல், அனைவரும் தனித்தனியாக நின்று நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியுமா?. இவ்வாறு அவர் பேசினார்.

