டெல்லி விரைகிறார் விஜய் : காங்.கூட்டணிக்கு ராகுல் சம்மதம்..?

Advertisements
கடந்த பல தேர்தல்களில் திமுகவும் காங்கிரசும் தோளோடு தோள் கை போட்டு கூட்டணி வைத்திருந்த நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக இந்த கூட்டணி முறிவடைகிறது . ஆருயிர் நண்பர்களாக திகழ்ந்த மு க ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒருவரை ஒருவர் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . யாருடனும் கூட்டணி இல்லை தனித்துதான் போட்டியிடுவோம் என்று முடிவெடுத்து வைத்திருந்த நடிகர் விஜய் தற்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருகிறார்.
ஆன்லைன் சூதாட்டம்.. ரம்மி விளையாட்டு.. ஆடு புலி ஆட்டம் என்பது போல் தமிழக அரசியலில் இப்பொழுது கூட்டணி ஆட்டம் வெகு ஜோராக நடைபெற்று வருகிறது .அந்த வகையில் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து நின்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது . கடந்த தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மதில் மேல் பூனையாக காட்சியளிக்கிறது
வைகோ தலைமையிலான மதிமுகவும் திடீர் பல்டி அடித்து பாஜகவுடன் கூட்டணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது .இந்த நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக நீடித்து வருகிறது . திமுக பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராக களமிறங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தை எடப்பாடி பழனிச்சாமி கொக்கி போட்டு இழுத்துப் பார்த்தார் ஆனால் யாருக்கு முதலமைச்சர் பதவி? என்ற கேள்விக்குறியால் நடிகர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார்
இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களாக வெளிவந்த தமிழ்நாடு தழுவிய ஆய்வுத் தகவல்கள் நடிகர் விஜய்க்கு 13 முதல் 15 சதவீத வாக்குகள்தான் கிடைக்கும் என தெரிவித்திருப்பது நடிகர் விஜய்யை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது . வருகிற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதில் ரஜினி ஸ்டைலில் குறி வைத்தால் இறை விழனும் என்ற பாணியில் விஜய் போராட்ட களத்தில் குதித்திருக்கிறார் . இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என அவர் தீர்மானம் செய்து இருக்கிறார்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தாராளமாகவும் தயாராகவும் இருக்கிறார்கள்
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் கூட்டணி சேர்த்துக் கொள்ளலாம் இது தவிர தேமுதிகவையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் தளபதி விஜய் . காங்கிரஸுடன் கூட்டணி என்பதை அறிவிக்கும் முகமாக வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அவர் திரை மறைவில் செய்து வருகிறார்
அந்த வகையில் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டு அதற்குரிய பணிகளையும் செய்து வருகிறார் இதற்கிடையே கடந்த வாரம் டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் சென்னை வந்து நடிகர் விஜய்யை சந்தித்து பேசி இருக்கிறார்
தங்களுடன் கூட்டணி சேர ராகுல் காந்தி தயாராக இருக்கிறார் என்ற தகவலை சொல்லி தமிழக வெற்றி கழகமும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்தால் தங்களது கோரிக்கைகள் என்ன என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்
முன்னதாக தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என தமிழக காங்கிரஸ் குரல் கொடுத்து வந்தது அது மட்டுமல்லாமல் அமைச்சரவையில் தங்களுக்கு இடம் வேண்டும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கோரிக்கைகள் நீடித்து வருகின்றன . ஆனால் அவற்றுக்கெல்லாம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் செவி கொடுப்பதாக இல்லை மாறாக கடந்த தேர்தலை விட வருகிற தேர்தலில் தொகுதிகளை குறைத்து தருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன
இந்த சூழ்நிலையில் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா எம் பி பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கள் காங்கிரஸ் கட்சியினர் இடையே மன கொதிப்பை ஏற்படுத்தி உள்ளன . இதுபோன்று தமிழகத்தில் நடைபெறும் சூழ்நிலைகள் அனைத்தும் டெல்லி காங்கிரஸ் மேலிடத்திற்க்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது
இதனிடையே முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்காவதி ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் பாகம் 2 புத்தக வெளியீட்டு விழாவிற்கு சோனியா காந்தியையும் பிரியங்கா காந்தியையும் அழைத்தார்கள் ஆனால் அவர்கள் இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டார்கள். காரணம் தவெகாவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் முகாந்திரம் தான் என்கிறார்கள் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தற்பொழுது டெல்லியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை சந்தித்து பேசியிருக்கிறார்
இருவருக்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் பல முக்கிய தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன . தமிழக வெற்றி கழக கூட்டணி வெற்றி பெற்றால் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும் 234 தொகுதிகளில் 60 தொகுதிகளை காங்கிரசுக்கு தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன . மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு கிளைக் கழக அமைப்பு இல்லாததால் காங்கிரஸ் கட்சியினர் கிளைக் கழகம் சார்பாக தீவிரமாக பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்னதாக டெல்லி காங்கிரஸ் மேலிடம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது . அந்தஆலோசனைக் கூட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை . மேலும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்தால் நடிகர் விஜய் அண்டை மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வளர்வதற்கு பிரச்சாரங்களில் அவரை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேரும் பொழுது  நிச்சயமாக விஜய் கட்சி வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்கள் பதவி கிடைக்கும்.  அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்றெல்லாம் ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருக்கிறது . இதன் பிறகு தான் டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விமானம் மூலம் சென்னை வந்து நடிகர் விஜய்யை சந்தித்து பேசி இருக்கிறார்
நடிகர் விஜய்யும் தனது கருத்து குறித்து தெரிவித்து ராகுல் காந்தியை சந்தித்து பேச வேண்டும் என தெரிவித்திருக்கிறார் . அந்த பிரமுகரும் டெல்லி சென்று ராகுல் காந்தியிடம் பேசிவிட்டு தகவல் சொல்வதாக கூறிவிட்டு சென்று இருக்கிறார் . ராகுல் காந்தியை பொறுத்தவரையில் திமுகவுடன் மிக நெருக்கமாகி மு க ஸ்டாலினுடன் அன்பு காட்டிய சூழ்நிலையில் எப்படி பிரிவது என்கிற இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறார் . இருந்தபோதிலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மு க ஸ்டாலினை பகைத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அவர் வருவதாக தெரிகிறது எனவே விரைவிலேயே ராகுல் காந்தி விஜய் சந்திப்பு டெல்லியில் நடைபெற காத்திருக்கிறது
ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் நடிகர் விஜய் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி செல்வ பெருந்தகை ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி கைகளை உயர்த்தி பிடித்தபடி புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று சொல்கிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *