இந்தியா – பாகிஸ்தான் இறுதிப்போட்டி- இந்தியா வரலாற்றுச் சாதனை!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஓமனின் அல் அமரத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக உஸ்மான் கான் 107 ரன்களும், அப்துல் காதிர் 80 ரன்களும், கேப்டன் பர்ஹான் யூசுப் 63 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய ஆர்யவீர் சேவாக் 58 ரன்களும், கேப்டன் லக்‌ஷ்யா ராஜேஷ் ராய்சந்தனி 80 ரன்களும், மனால் சவுகான் 47 ரன்களும், மொஹித் உல்வா 49 ரன்களும் எடுத்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த வெற்றித் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஆசியக் கோப்பையை வென்ற நமது இளம் கிரிக்கெட் வீரர்களைக் கண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இவர்களின் வெற்றி பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அணியின் எதிர்கால முயற்சிகளுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *