
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 27ஆம் நாள் கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதன்பின் கட்சியின் பரப்புரைக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுன், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முதலில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.
கரூர்க் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியானதற்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கைக் கடற்படைக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் முறைப்படி கொள்முதல் செய்யாத மாநில அரசுக்குக் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



