கரூர்க் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் தனிப் பேருந்தில் மாமல்லபுரத்தில் உள்ள விடுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களைத் தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
செப்டம்பர் 27ஆம் நாள் கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 20 இலட்ச ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
கூட்ட நெரிசல் பற்றி விஜய் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் கரூர்க் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அங்கிருந்து தனிப் பேருந்தில் ஏற்றிச் சென்னைக்குத் தெற்கே மாமல்லபுரத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு அவர்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்தித்துப் பேச உள்ளார்.


