21ஆம் நூற்றாண்டில் ஆசியான் அமைப்பின் சமூகத் தொலைநோக்குக் கொள்கை மனித குலத்துக்கான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குமெனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் மாநாடு நடைபெற்றது. அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக இந்தியப் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ஆசியான் அமைப்பில் புதிதாக இணைந்துள்ள திமோர் நாட்டை வரவேற்றார். உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளில் தான் வாழ்வதாகத் தெரிவித்தார்.
ஆசியான் நாடுகளுடன் இந்தியா வணிகத் தொடர்பு மட்டும் கொண்டிருக்காமல் பண்பாட்டுத் தொடர்புகளும் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தியா எப்போதும் ஆசியான் கூட்டாளிகளுடன் துணை நின்று வருவதாகக் கூறிய அவர், மனிதநேய உதவி, பேரிடர் மீட்புப் பணி, கடலோரப் பாதுகாப்பு, கடல்சார் வளங்கள் அடிப்படையிலான பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டில் ஆசியான் அமைப்பின் சமூகத் தொலைநோக்குக் கொள்கை, வளர்ந்த பாரதம் ஆகியவற்றின் நோக்கம், முழு மனித குலத்துக்கான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குமென நம்புவதாகக் கூறினார்.

