
சென்னை: தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது மீட்பு பணிகள்குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைவுபடுத்த ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெள்ள பாதிப்பு தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மின்விநியோகம், மேற்கொள்ள வேண்டிய நிவாரணப்பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தடையின்றி உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் கிடைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 27 டன் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஸ்ரீவைகுண்டத்திலேயே உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



